காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் கர்நாடகா ஐகோர்ட்

காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு கர்நாடகா அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. #Kaala #Rajinikanth

Update: 2018-06-05 09:25 GMT

பெங்களூரு, 

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் வருகிற 7-ந் தேதி(அதாவது நாளை மறுநாள்) உலகம் முழுவதும் வெளியாகிறது. காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால், அவருடைய படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்துள்ளது.

காலா படத்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார். ஆயினும் எக்காரணம் கொண்டும் ‘காலா’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியும் இந்த விஷயத்தில் கையை விரித்துவிட்டார்.

இந்த நிலையில் ‘காலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் ‘காலா’ படம் வருகிற 7-ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காலா படம் திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்