எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர்ந்து கவலைக்கிடம் - தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-08-19 12:11 GMT
சென்னை,

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 5-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண் தந்தையின் உடல் நிலை குறித்து நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

எனது தந்தையின் உடல்நிலை நேற்று இருந்தது போலவே இருக்கிறது. அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியான வென்டிலேட்டரை நீக்கி விட்டதாக வதந்தி பரவி உள்ளது. அது உண்மை அல்ல. செயற்கை சுவாச கருவி உதவி இல்லாமல் விரைவில் அவர் சுவாசிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவர் தொடர்ந்து வெண்டிலேட்டரில்தான் இருக்கிறார். அப்பாவை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அனைவருடைய பிரார்த்தனைகளும் அவரை மீட்டு கொண்டு வரும் என்று நம்புகிறோம். என்று அவர் கூறினார்.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்