போதைப்பொருள் வழக்கு; கைது செய்யப்பட்ட நகைச்சுவை நடிகை பாரதி சிங் ஜாமீனில் விடுதலை

வீட்டில் போதைப்பொருள் சிக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நகைச்சுவை நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2020-11-23 09:39 GMT
மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த்சிங் மரணத்தை அடுத்து மும்பையில் இந்தி திரையுலகினர் மற்றும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தேரி லோக்கன்ட்வாலா பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, போதைப்பொருள் வி்ற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது நடிகை பாரதி சிங்கின் பெயரும் அடிப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம். அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

பாரதி சிங் கிலாடி 786, சனம் ரே உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பாரதி சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில் மும்பையில் உள்ள என்.டி.பி.எஸ். சிறப்பு நீதிமன்றத்தில் பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் ஜாமீன் வழங்க கோரி மனு செய்திருந்தனர்.  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்