முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் போதையில் இருந்த மகனால் அடித்து கொலை

முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் தம்பி குடிபோதையில் இருந்த தனது மகனால் அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.

Update: 2020-06-11 11:28 GMT
கொல்லம்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ஜெயமோகன் தம்பி.  கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வரும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து துணை மேலாளராக ஓய்வு பெற்றவர்.  கடந்த 2 வருடங்களுக்கு முன் இவரது மனைவி அனிதா காலமானார்.  இதனால் அவர் தொடர்ந்து மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

இவரது மூத்த மகன் அஸ்வின், ஓட்டலில் ‘செஃப்’பாக இருந்து வருகிறார்.  எனினும், பண தேவைக்காக தனது தந்தையை சார்ந்தே இருந்துள்ளார்.  மனைவி மறைவு மற்றும் மகனின் நிலை ஆகியவற்றால் வருத்தத்தில் இருந்த ஜெயமோகன் தனது மகனுடன் சேர்ந்து மது குடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை மர்ம முறையில் இறந்து கிடந்த ஜெயமோகனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில், குடிபோதையில் இருந்த மகனால் அவர் அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

தனது தந்தையின் ஏ.டி.எம். கார்டை அஸ்வின் வைத்துள்ளார்.  அந்த கார்டு மற்றும் தனது பர்சை திருப்பி தரும்படி ஜெயமோகன் கேட்டுள்ளார்.  இதில் ஏற்பட்ட தகராறில், அஸ்வின் தனது தந்தையின் முகத்தில் குத்தியுள்ளார்.  பின்பு அவரது தலைமுடியை பிடித்து இழுத்து சென்று சுவரில் மோத செய்துள்ளார்.  இந்த சம்பவத்தில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

அஸ்வின் தனது தந்தையை வீட்டுக்குள் இழுத்து செல்லும் காட்சியை பார்த்தது பற்றி பக்கத்து வீட்டு பெண் போலீசிடம் கூறியுள்ளார்.  எனினும், ஜெயமோகன் மரணம் அடைந்தது பற்றி அவரது மகன் அறிந்திருக்கவில்லை.  ஏனெனில் அவர் தொடர்ந்து போதையிலேயே இருந்துள்ளார்.  இதுபற்றி அனைத்து சான்றுகளையும் சேகரித்துள்ள போலீசார் அஸ்வினை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்