ஐபிஎல் கிரிக்கெட் : சுப்மன் கில் அதிரடி அரைசதம் - குஜராத் அணி சிறப்பான தொடக்கம்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.

Update: 2022-04-08 16:56 GMT
Image Courtesy : @IPL
மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று  வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து ஜானி பேரிஸ்டோவ் களமிறங்கினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அதன் பின் களத்தில் இருந்த ஷிகர் தவானுடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார்.

லிவிங்ஸ்டன் தனது பாணியில் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். நிதானமாக விளையாடிய தவான் 35 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதே நேரத்தில் மறுமுனையில் ஜிதேஷ் சர்மா மற்றும் ஒடின் ஸ்மித், நல்கண்டே பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 64 ரன்களில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் சாஹர் - அர்தீப் அதிரடி காட்டினர். அவர்கள் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - வேட் களமிறங்கினர். கில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்க வேட் 6 ரன்களில் வெளியேறினார். இதை தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்.

அவரும் கில் உடன் இணைந்து பவுண்டரிகளை விரட்டினார். சிறப்பாக விளையாடிய கில் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தற்போது வரை குஜராத் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது 

மேலும் செய்திகள்