"உம்ரான் மாலிக்கை அதிகம் பயன்படுத்தினால் இது நேரிடும் "- பிசிசிஐ-க்கு பிரபல வீரர் அறிவுரை..!!

பிசிசிஐ உம்ரான் மாலிக்கை கவனித்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் அறிவுரை தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-29 14:26 GMT
Image Courtesy : Twitter @IPL
மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளராக கலக்கி கொண்டு இருப்பவர் உம்ரான் மாலிக் .

தொடர்ந்து 150 கி.மீ  வேகத்தில் பந்துவீசும் இவர்தொடர்ந்து 8-வது முறையாக "போட்டியின் அதிவேகமான பந்தை"  வீசி விருதை தட்டி சென்றுள்ளார். வருங்கால இந்திய அணியின் நட்சத்திரமாக இவர் உருவெடுப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முனாப் பட்டேல், உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ளார்.

மாலிக் குறித்து அவர் கூறுகையில், " நான் எப்படி மேலே வந்தேனோ அதுபோலவே உம்ரான் வளர்ந்து வருகிறார். நீங்கள் அவரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். பிசிசிஐ அப்படி செய்தால் மட்டுமே அவர் நீண்ட காலம் இந்திய அணியில் நீடிப்பார்.

இதற்கு முன்  145-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பந்துவீச்சாளராக ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா,  விஆர்வி சிங் மற்றும் நான் இருந்தேன். 

தற்போது உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி போன்றவர்கள் உள்ளனர். ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஒரு வருடத்தில் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இருக்கும் வகையில் ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.

இப்போது, நிச்சயமாக, பிசியோதெரபி மற்றும் பயிற்சியின் அடிப்படையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது, இருப்பினும் பிசிசிஐ அவரை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அவரை அதிகமாகப் பயன்படுத்தினால், அவர் ஒரு பெரிய காயத்திற்கு ஆளாக நேரிடும், அதனால் அவர் தனது வேகத்தைக் குறைக்கத் தொடங்க நேரிடும் " என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்