ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதால் தபால் நிலையத்தில் ஓய்வூதியதாரர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

கோவை தலைமை தபால் நிலையத்தில் பணத்தட்டுப்பாடு காரணமாக ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதால் ஓய்வூதியதாரர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓய்வூதியம் கோவை மாவட்டத்தில் 4 தலைமை த

Update: 2016-12-31 22:15 GMT
கோவை தலைமை தபால் நிலையத்தில் பணத்தட்டுப்பாடு காரணமாக ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதால் ஓய்வூதியதாரர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஓய்வூதியம்

கோவை மாவட்டத்தில் 4 தலைமை தபால் நிலையங்கள், 170 துணை தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 5 ஆயிரம் பேர் ஓய்வூதியம் (பென்சன்) பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.8 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த தொகையை அவர்களுடைய சேமிப்பு கணக்கில் செலுத்துவதும், நேரில் வந்து பெற்றுக்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

தபால் நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் பென்சன் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு பென்சன் தொகை வாங்குவதற்காக பென்சன்தாரர்கள் பலர் வந்தனர். ஆனால் அவர்களுக்கு பணத்தட்டுப்பாடு காரணமாக தபால் நிலையத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

ஆனால் அந்த பணம் மூலம் செலவுகளை சமாளிக்க முடியாது என்று கூறி அவர்கள் அங்கேயே நின்று திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முழு பென்சன் தொகையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஓய்வூதியதாரர்கள் சங்க நிர்வாகி சுப்பிரமணியம் கூறியதாவது:- கடந்த ஒரு மாதமாக தபால் நிலையங்களில் பணம் இல்லாத நிலை உள்ளது. ஸ்டேட் வங்கியில் இருந்து தபால் நிலையத் துக்கு போதிய பணம் அனுப்பி வைக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் பென்சன் தொகை வாங்க அலைய வேண்டி உள்ளது. ஆகவே இது குறித்து மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்