அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். விலையில்லா மடிக்கணினி தர்மபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிற

Update: 2017-01-07 23:15 GMT

தர்மபுரி,

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

விலையில்லா மடிக்கணினி

தர்மபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பூமாண்டஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளருமான ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். பூமாண்டஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 79 மாணவ, மாணவிகளுக்கும், கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 142 மாணவ, மாணவிகளுக்கு ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணினிகளை அவர் வழங்கினார்.

அதிக நிதி ஒதுக்கீடு

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், கணித உபகரணங்கள், காலணி உள்பட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதே போன்று உயர்கல்வித்துறைக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கல்லூரிகள் மூலம் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி மேம்பாடு அடைந்துள்ளது என்று கூறினார்.

இந்த விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் மகாலிங்கம், சவுந்திரராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்