போடி அருகே வாடிய பயிரை பார்த்து மயங்கி விழுந்த விவசாயி சாவு

போடி அருகே வாடிய பயிரை பார்த்த விவசாயி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். விவசாயிகள் பரிதவிப்பு தேனி மாவட்டம் போடி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. மேலும் கிராமப் பகுதிகள

Update: 2017-01-07 22:15 GMT

போடி,

போடி அருகே வாடிய பயிரை பார்த்த விவசாயி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விவசாயிகள் பரிதவிப்பு

தேனி மாவட்டம் போடி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்களும் வறண்டு விட்டன. கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் போடி அருகே தனது நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் காய்ந்து போய் இருப்பதை பார்த்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். அதன் விவரம் வருமாறு:–

மயங்கி விழுந்து சாவு

போடி அருகே உள்ள லட்சுமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 53). விவசாயியான இவருக்கு டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். நேற்று தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை பார்வையிடுவதற்காக சென்றார்.

அப்போது தோட்டத்தில் பயிர்கள் காய்ந்து போய் இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், ஜீவப்பிரியா, கிரிதரன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

விசாரணை

ஸ்ரீதரன் இறந்தது குறித்து உத்தமபாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்