நாகர்கோவில் அருகே பரிதாபம் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவர் உயிருடன் மீட்பு

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கல்லூரி மாணவர் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ஆகாஷ் (வய

Update: 2017-01-08 23:00 GMT

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கல்லூரி மாணவர்

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 18). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்தார். இதற்காக கல்லூரி விடுதியில் தங்கி வகுப்பு சென்று வந்தார். இவருடன் அதே கல்லூரியில் திருச்செந்தூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் விக்னேஷ் (18), ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஆகாஷ் (18), திருநெல்வேலி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் பிரவின் முத்துக்குமார் (18), நெய்வேலியை சேர்ந்த ஆகாஷ் (18) ஆகியோர் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

இந்தநிலையில் மார்த்தாண்டத்தில் நடந்த விபத்தில் சக கல்லூரி மாணவன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை ஆகாஷ் உள்பட 5 மாணவர்களும் அறிந்தனர். இதனையடுத்து அவரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று காலை மார்த்தாண்டத்துக்கு வந்தனர். அங்கு காயமடைந்த மாணவரை பார்த்து ஆறுதல் கூறி விட்டு, நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடலில் குளிப்பதற்காக சென்றனர்.

அலையில் சிக்கி பலி

அங்கு நண்பர்கள் 5 பேரும் கடலில் உற்சாகமாக குளித்தனர். அப்போது கடற்கரையை நோக்கி வந்த ராட்சத அலையில் கம்பத்தை சேர்ந்த ஆகாசும் மற்றும் விக்னேசும் சிக்கி கொண்டனர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். கடலில் சிக்கி தவிக்கும் 2 பேரையும் சக நண்பர்கள் காப்பாற்ற முடியாமல் திணறினர்.

இதனை பார்த்த மீனவர் மரிய ஆல்வின் உள்பட 3 பேர் வள்ளத்தில் கடலுக்குள் சென்று தத்தளித்த 2 பேரையும் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். கடலில் தத்தளித்த போது, தண்ணீர் அதிகமாக குடித்ததால் மயங்கிய விக்னேஷை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான ஆகாசின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சக நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்