ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது: புன்னகை சிந்தும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

இதமான குளிர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைக்கிராமங்களில் மலைக்க வைக்கும் இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடுங்கவைக்கும் குளிரும், மற்ற மாதங்களில் இதமான குளிரும் நிலவுகிறது. இந்த ம

Update: 2017-01-08 22:00 GMT

கொடைக்கானலின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லை. அதன் எழில் கொஞ்சும் அழகுதான் ‘மலைகளின் இளவரசி’ என்ற பெயரை பெற்று தந்தது. அதே வேளையில், கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களும் அழகில் சளைத்ததல்ல. அங்கு தாண்டிக்குடி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, பெரும்பாறை, புல்லாவெளி, ஆடலூர், பன்றி மலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. காபி, மிளகு, ஆரஞ்சு விவசாயம் பிரதானமாக இருக்கிறது.

இதமான குளிர்

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைக்கிராமங்களில் மலைக்க வைக்கும் இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடுங்கவைக்கும் குளிரும், மற்ற மாதங்களில் இதமான குளிரும் நிலவுகிறது.

இந்த மலைக்கிராமங்களில் வளைந்து, நெளிந்து செல்லும் மலைச்சாலையில் பயணிப்பதே ஒரு சுகம்தான். மலைச்சரிவில் துளிர்த்து விண்ணை முட்டும் உயரம் வளர்ந்த மரங்கள், பல வண்ண பூஞ்செடிகள் கண்களை குளிர்விக்கின்றன. வருடி செல்லும் சுகமான, சுத்தமான காற்று உடலை சிலிர்க்க செய்கிறது.

வனங்களுக்குள் இருக்கும் இந்த கிராமங்களில் அடிக்கடி வன விலங்குகளையும் பார்க்க முடிகிறது. கொடைக்கானலை போல இயற்கை அழகு குவிந்து கிடந்தாலும், இதை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சொற்ப அளவில் இருப்பது வேதனையின் உச்சம்தான்.

புல்லாவெளி நீர்வீழ்ச்சி

இதற்கு, மேல்மலை கிராமங்களில் துளிர்த்த சுற்றுலா வசதிகள், அனைத்து தகுதிகளும் இருக்கும் கீழ்மலை கிராமங்களில் எட்டி பார்க்கவில்லை என்பதுதான் காரணம். இதே போல, இயற்கை அன்னை கொடுத்த கொடையை செயற்கை கலவையுடன் அற்புதமான சுற்றுலாதலமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடவுள் கொடுத்த பரிசான புல்லாவெளி நீர்வீழ்ச்சி இன்றளவும் பயன்படுத்தப்படவில்லை. அதை சுற்றுலா தலமாக்க எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

இந்த நீர்வீழ்ச்சி புல்லாவெளி கிராமத்தின் வலதுபுறத்தில் சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கீழ்மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீரூற்றுகள் சங்கமிக்கும் இடம்தான் குடகனாற்றின் தொடக்கப்புள்ளி. இந்த ஆறு ஆத்தூர் காமராஜர் அணையில் நிறைவு பெறுகிறது. இந்த இடைப்பட்ட பயணத்தில் சிலிர்க்க வைக்கும் சலனத்துடன் ஆற்று நீர் பாய்ந்தோடுகிறது. பல இடங்களில் நீர் வீழ்ச்சிகளும், சிற்றருவிகளும் உள்ளன. இதில் புல்லாவெளி நீர் வீழ்ச்சி பிரதானமானதாகும்.

வானுயர்ந்த மரங்கள், அடர்ந்த செடி, கொடிகள், மலை முகடுகளுக்கு இடையே சல,சலக்கும் ஓசையுடன் மளமளவென தண்ணீர் கொட்டும் புல்லாவெளி நீர் வீழ்ச்சி, பார்ப்போரின் மனதை மயக்குவதாக இருக்கிறது. இதன் உயரம் சுமார் 30 அடி இருக்கும். ஆற்றில் வரும் தண்ணீர் நீர் வீழ்ச்சியில் விழுந்து சிறிய குட்டை போல தேங்கி, அங்கிருந்து தனது பயணத்தை தொடர்கிறது.

சுற்றுலாதலம்

அழகு ததும்பும் இந்த நீர்வீழ்ச்சியை ரசிக்க போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. அதாவது, சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சி தொடங்கும் மேற்பகுதியில் இருந்து மட்டுமே பார்வையிட முடியும். கீழே இறங்கி அதன் அற்புதமான அழகை முழுமையாக பார்க்க அனைவராலும் இயலாது. மாறாக, பாறைகள், மரங்கள் வழியாகத்தான் கீழே இறங்கி பார்க்கலாம். அனுபவம் வாய்ந்த கிராம மக்களும், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளில் வாலிபர்கள் மட்டுமே புல்லாவெளி நீர்வீழ்ச்சியை ரசிக்கிறார்கள். அதுவும் ஆபத்தான முறையிலேயே அரங்கேறுகிறது.

எனவே, நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க, பாதுகாப்பு அம்சங்களுடன் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். மேற்பகுதியிலும் இரும்பு கம்பியால் தடுப்பு வேலிகள் மூலம் அரண் அமைத்து, அதன் அழகை ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் நீர்வீழ்ச்சியை மட்டுமின்றி, அருகே உள்ள பசுமை பொதிந்த வியக்க வைக்கும் பள்ளத்தாக்கையும் பார்வையிடலாம்.

மேலும், நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு போதிய வசதிகளை செய்துகொடுக்கலாம். புல்லாவெளி கிராமம் அமைந்துள்ள பகுதியில் பூங்காவும் அமைத்து சுற்றுலா பயணிகளை கவர முயற்சிக்கலாம். இதற்கு கைமேல் பலன் கிடைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. புன்னகை சிந்தும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாதலமாக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதுபற்றி மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் உமா தேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–

ஆய்வு தேவை

சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் ஏற்கனவே பல திட்டமதிப்பீடுகள் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் நிலுவையில் இருக்கின்றன. விரைவில் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று கருதுகிறோம். புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க முடியுமா என்பது பற்றி ஆய்வு நடத்த வேண்டி உள்ளது.

அந்த பகுதியை பார்வையிட்டு, அங்கு போதிய வசதிகள் இருக்கிறதா? சுற்றுலா தலமாக்க ஏற்ற இடமா? என்பது பற்றி ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தால் நிச்சயமாக திட்டமதிப்பீடு அனுப்பி சுற்றுலாதலமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆபத்துகள் இருந்தாலும், அதை பாதுகாப்பானதாக மாற்றி புல்லாவெளி நீர் வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் அந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாதலமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆபத்தான சுழல்

புல்லாவெளியில் நீர்வீழ்ச்சியில் விழுந்து தனது பயணத்தை தொடரும் குடகனாறு, 30 அடி தூரத்துக்குள் ஆபத்தான அருவியாக கொட்டுகிறது. அந்த அருவியை எட்டி பார்த்தாலே கை, கால் நடுங்கிவிடும். மிக உயரமான அந்த அருவி மிகவும் குறுகிய இடைவெளியில் அமைந்துள்ளது. தொடர்ந்து ஆழ்ந்த பள்ளத்தாக்கை நோக்கி ஆறாக பயணிக்கிறது. அருவி கொட்டும் இடத்தில் பல அடி ஆழத்தில் சுழல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சுழலில் சிக்கி பலரும் மாண்டதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, மழைக்காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் வரும்போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், எனவே, அந்த அருவியின் அருகே யாரும் நெருங்க வேண்டாம் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கிறார்கள்.

பொலிவை இழக்கும் நீர்வீழ்ச்சி

புல்லாவெளி நீர்வீழ்ச்சி தற்போது குடிகாரர்களின் பிடியில் சிக்கி உள்ளது. அதாவது, அந்த அருவிக்கு அருகே பலரும் அமர்ந்து மது அருந்துகிறார்கள். பிறகு, அங்கேயே பாட்டில்களையும், பாலித்தீன் பைகளையும் வீசி செல்கிறார்கள். இதனால், நீர்வீழ்ச்சியின் அருகே கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கிடக்கின்றன. குடிகாரர்களால் நீர்வீழ்ச்சி பொலிவை இழந்து வருகிறது. அவர்களிடம் இருந்து அதை மீட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்