கோவை மாவட்டத்தில் வறட்சி பணி கணக்கெடுப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை மாவட்டத்தில் வறட்சி பணி கணக்கெடுப்பு நேற்று நடந்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். வறட்சி பணி கணக்கெடுப்பு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்ற

Update: 2017-01-08 22:00 GMT

கோவை,

கோவை மாவட்டத்தில் வறட்சி பணி கணக்கெடுப்பு நேற்று நடந்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

வறட்சி பணி கணக்கெடுப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனறு பல்வேறு விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர், கலெக்டர் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவடடத்திலும் சுற்றுப்பயணம் செய்து வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் வறட்சி பணி கணக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதற்காக கோவை மாவட்ட வறட்சி பணி கணக்கெடுப்பு கண்காணிப்பு குழு அதிகாரியும், கைத்தறி மற்றும் துணி நூல் அரசு துறை முதன்மை செயலாளருமான ஹர்மர்ந்தர் சிங் நேற்று காலை கோவை வந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்காணிப்பு குழுவினரும், மாவட்ட கலெக்டர் ஹரிகரன் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் நேற்று காலையில் எட்டிமடை சென்றனர். அங்கு காய்ந்துபோன சோளக்காட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறினார்கள். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆய்வு குழுவினர் கூறினார்கள்.

67 சதவீதம் மழை குறைவு

அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 671 மி.மீட்டர். முந்தைய ஆண்டு கோவை மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு 820.6 மி.மீட்டர். ஆனால் கடந்த 2016–ம் ஆண்டு 223 மி.மீட்டர் மழை தான் பெய்துள்ளது. இது சராசரி மழையளவை விட 67.5 சதவீதம் குறைவாகும். வடகிழக்கு பருவமழையின் சராசரி மழையான 333.3 மி.மீட்டர் பெய்வதற்கு பதில் கடந்த 2016–ம் ஆண்டு 109.1 மி.மீட்டர் தான் பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 67.3 சதவீதம் குறைவானதாகும்.

கோவை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 869 ஹெக்டேரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அதில் 8 ஆயிரத்து 230 ஹெக்டேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மக்காசோளம் பயிரிடப்பட்ட 2 ஆயிரத்து 916 ஹெக்டேரில் ஆயிரத்து 665 ஹெக்டேரும், 4 ஆயிரத்து 662 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிறு வகைகள் 2 ஆயிரத்து 200 ஹெக்டேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி பாதித்த மாநிலம்

கோவை மாவட்டத்தில் உள்ள 295 கிராமங்களில் 276 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 29 கிராமங்களை முதல் கட்டமாக தேர்வு செய்து அதில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக அணைகள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மழை முழுமையாக பொய்த்து தமிழகம் முழுவதும் இயற்கையினால் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கிடைக்கும் இடங்களில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் போடப்படுகின்றன. தேவையான,இடங்களில் லாரிகள் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 மாவட்டங்களில் முதல் அமைச்சரின் உத்தரவின்பேரில் வறட்சி பணி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு பல்வேறு அளவுகோல் வைத்துள்ளது. அவற்றை பூர்த்தி செய்தால் தான் வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கும். கடந்த வார்தா புயலின்போது ஏரிகள் அதிகம் உள்ள திருவள்ளூரில் மழை இல்லை. ஆனால் காஞ்சிபுரத்தில் 22 செ.மீட்டர் மழை பெய்தது. ஆனால் அந்த தண்ணீர் முழுவதும் கடலில் சென்று கலந்து விட்டது. தமிழகம வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மத்திய அரசு அறிவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

அனைவருக்கும் முழு நிவாரணம்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் முழு நிவாரணம் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு கண்டிப்பாக நிவாரண தொகை முழுமையாக கிடைக்கும். வறட்சி பணி கணக்கெடுப்பு முடிவடைந்து அறிக்கையாக தயாரித்து அதன்பின்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், மகேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், சூலூர் கனகராஜ், கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ், மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி கிறிஸ்துராஜ், கோட்ட வருவாய் அதிகாரி மதுராந்தகி, பொள்ளாச்சி சப்–கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன், பயிற்சி கலெக்டர் பிரியங்கா, மற்றும் நெகமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமசுந்தரம், சி.டி.சி. சின்ராஜ் உள்பட ஏராளமான அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதன்பின்னர் வறட்சி கணக்கெடுப்பு குழுவினர் தொண்டாமுத்தூர், வெள்ளிமலைப்பட்டினம், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம் குப்பேபாளையம் கிராமத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை வறட்சி ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாயிகளிடம் கூறுகையில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குப்பேபாளையம் ராம் நகரில் குடிநீர் குழாய் விரைவில் அமைக்கப்படும். கோவில்பாளையம் முதல் ஒன்னிபாளையம் வரை உள்ள தார் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். குப்பேபாளையம் பஞ்சாயத்தில் மேட்டுப்பாளையம் வேடர் காலனிக்கு வையம்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதன்பின்னர் ஆய்வு குழுவினர் சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையத்தில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கருகிய சோள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்திருந்த 20–க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட தங்களின் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து கண்காணிப்பு குழுவினர் நெகமம் ரங்கம்புதூரில் உள்ள தென்னந்தோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு ஆய்வு குழுவினர் பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் வறட்சி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்