புன்னகாயலில் பரபரப்பு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு

புன்னகாயலில் பரபரப்பு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு

Update: 2017-01-08 23:00 GMT
ஆறுமுகநேரி,


புன்னக்காயலில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பஞ்சாயத்து அலுவலகத்துக்கு ஊர் கமிட்டியினர் பூட்டு போட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஊர்கமிட்டி கூட்டம்


புன்னகாயல் பகுதியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை சரிசெய்வது குறித்து நேற்று ஊர் கமிட்டி கூட்டம் நடந்தது. கமிட்டி தலைவர் ஜோசப் பர்னாந்து தலைமை தாங்கினார். பங்குதந்தை கிஷோக் அடிகளார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஏரலில் இருந்து புன்னகாயலுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தகுந்த பராமரிப்பு இல்லாததால் முடங்கி போய் உள்ளது. அதனை அரசு உதவியுடன் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர் பிரச்சினை குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொதுமக்கள் மீது அக்கறையில்லாமல் இருக்கும் புன்னகாயல் பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்ட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அலுவலகத்துக்கு பூட்டு


கூட்டம் முடிந்த பின்னர் புதிய பூட்டு வாங்கி, புன்னகாயல் பஞ்சாயத்து அலுவலகத்தை ஊர் கமிட்டியை சேர்ந்தவர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இதனால் புன்னக்காயலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்