மாணவர்கள் அனுமதிக்க மறுத்ததால் மதுரையில் தனியாக போராட்டம் நடத்திய சீமான்

மதுரையில் மாணவர்கள் அனுமதிக்க மறுத்ததால் சீமான் தனியாக போராட்டம் நடத்தினார்.

Update: 2017-01-18 23:30 GMT
மாணவர்கள் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேற்று பகலில் கோரிப்பாளையம் பகுதியில் மாணவர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் சிலர், அவர் மீது தண்ணீர் பாக்கெட்டை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனியாக ஆர்ப்பாட்டம்

இதனையடுத்து அவர் நேற்று இரவு 9 மணி அளவில் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தற்போது மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதே கோரிக்கையை வலியுறுத்தியும், நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது எங்கள் கட்சி சார்பில் எடுத்துரைத்தோம். அப்போது போதிய விழிப்புணர்வு இல்லை. இப்போது இளைஞர்கள் பெரும் போராட்டமாக நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் வீரியம் அதிகரித்து உள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவோம்

தமிழர்களின் இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும். போராட்டங்கள் மூலமாக தான் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களின் இந்த போராட்டம் வெற்றி பெற முழுமையாக ஆதரிக்கிறேன். மாணவர்கள் முன்னெடுத்து செல்லும் இந்த போராட்டத்தில் அரசியல் கலக்க வேண்டாம் என நினைக்கிறார்கள்.

இதனால் அவர்களுடன் சேர்ந்து போராடாமல் நான் தனியாக போராடுகிறேன். ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கு பதில், சிறப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதை வலியுறுத்தி இதே இடத்தில் வருகிற 20-ந்தேதி வரை போராடுவேன். அன்று வரை தான் மத்திய அரசுக்கு கெடு. அதற்குள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவில்லையென்றால் 21-ந்தேதி எனது தலைமையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவோம். போராட்டங்களுக்கு மதிப்பளித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்