தேனியில் தர்கா கட்டுவதற்கு எதிர்ப்பு: தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

தேனியில் தர்கா கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தேனி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

Update: 2017-02-06 22:00 GMT
பேச்சுவார்த்தை

தேனி அல்லிநகரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் அருகில் ஒரு தர்கா அமைந்து இருந்தது. பழமையான இந்த தர்காவை புதுப்பித்து கட்டும் பணி சமீபத்தில் தொடங்கியது. இதற்கு இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர்.

இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். அதன்பேரில் அல்லிநகரம் கிராம கமிட்டி, இந்து எழுச்சி முன்னணி, முஸ்லிம் ஜமாத்தார் ஆகிய 3 தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தேனி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் அயூப்கான் தலைமை தாங்கினார். அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி முன்னிலை வகித்தார்.

முடிவுகள்

கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:–

கோவிலை சுற்றியுள்ள நிலங்கள் குறித்து தாசில்தார் தலைமையில் நிலஅளவீடு செய்து, கோவில் மற்றும் தர்கா தொடர்பாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். நிலஅளவை அறிக்கை தயார் செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், கோவில் தக்கார், வக்பு வாரிய ஆய்வாளர் மற்றும் கோவில், தர்கா சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து வருகிற 15–ந்தேதி அமைதிக்கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட இடங்களில் இருதரப்பினரும் எவ்வித கட்டுமான பணிகளையும் செய்யக்கூடாது.

இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் செய்திகள்