சிக்கமகளூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேர் கைது

சிக்கமகளூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-02-06 20:19 GMT
சிக்கமகளூரு,

சிக்கமகளூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தெரிவித்தார்.

சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை பேட்டி


சிக்கமகளூரு மாவட்டத்தில் சூதாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் சூதாட்டம் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. கடந்த ஆண்டு சூதாட்ட வழக்கில் கைதாகி வெளியே வந்த காபி தோட்ட அதிபர் தேஜஸ்கவுடாவை, கடத்தியதாக கூறப்பட்டதால் துணை போலீஸ் சூப்பிரண்டு கல்லப்பா ஹண்டிபாக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்தும் சிக்கமகளூரு மாவட்டத்தில் சூதாட்டம் நடக்க தான் செய்கிறது. இந்த நிலையில் சிக்கமகளூரு டவுன் விஜயபுரா பகுதியை சேர்ந்த நகரசபை முன்னாள் துணை தலைவரான ரவி என்பவர் சமீபத்தில் நடந்த இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது, தனது வீட்டில் வைத்து டி.வி.யை பார்த்தப்படி சூதாட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

5 பேர் கைது

அவரிடம் நடத்திய விசாரணையில், இதில் மேலும் அவரது நண்பர்களான அபி, பிரசாந்த், வெங்க டேஷ், மோகன், அப்சல் ஆகிய 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் சேர்ந்து வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி அதன் மூலம் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கைதான ரவி கொடுத்த தகவலின்பேரில் அவருடைய நண்பர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு பெங்களூரு மற்றும் கர்நாடகத்தில் உள்ள பிற மாநிலங்களில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்