நாகை பகுதியில் கழிவுநீரை தெருவோர வடிகால்களில் விடுபவர்கள் மீது நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகை நகராட்சி பகுதியில் கழிவுநீரை தெருவோர வடிகால்களில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-06 21:48 GMT

நாகப்பட்டினம்,

பாதாள சாக்கடை திட்டம்

நாகை நகராட்சி ஆணையர் ஜான்சன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:– நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அதை தொடர்ந்து வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து பாதாள சாக்கடை இணைப்புகள் நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வீடுகள், காலனி வீடுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கழிவறைகள், குளியலறைகள், சமையலறை ஆகியற்றில் இருந்து கழிவு நீர் மற்றும் அனைத்து வகையான கழிவு நீரையும் பாதாள சாக்கடையில் விடலாம்.

நடவடிக்கை

இதற்காக நாகை நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணங்களை அதற்கான கட்டணத்துடன் செலுத்தி பாதாள சாக்கடை இணைப்பு பெற்று கொள்ள வேண்டும். நகரின் தூய்மையை மேம்படுத்த பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் கழிவுநீரை தெருவோர வடிகால்களில் விடுவது குற்ற செயல் ஆகும். அவ்வாறு பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் கழிவு நீரை தெருவோர வடிகால்களில் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்