தட்டம்மை தடுப்பூசி போட்ட 8 மாணவ– மாணவிகளுக்கு மயக்கம்

கொடைரோடு பகுதியில் தட்டம்மை தடுப்பூசி போட்ட 8 மாணவ–மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-07 22:26 GMT
தடுப்பூசி

தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத்துறை மூலம் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாம் வருகிற 28–ந் தேதி வரை நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மருத்துவக் குழுவினர் தடுப்பூசி போட்டனர். அப்போது தடுப்பூசி போட்ட மலைச்சாமி, காளிதாஸ், மகேஸ்வரி, விஜயலட்சுமி ஆகிய 4 மாணவ, மாணவிகள் திடீரென மயக்கம் வருவதாக தெரிவித்தனர்.

பெற்றோர்கள் படையெடுப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் தடுப்பூசி போட்டு மாணவ– மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என மருத்துவக்குழுவினரிடம் தெரிவித்தனர். மாணவ– மாணவிகளை வீட்டிற்கு அழைத்து செல்லவும் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் தடுப்பூசி போடுவதின் காரணத்தை பெற்றோரிடம் எடுத்துக்கூறினர். மேலும் போலீசாரும் வந்து எடுத்து கூறினர். எனினும் கேட்காமல் பலர் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தர்மராஜ் கூறும்போது, ‘மாணவ, மாணவிகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மயக்கம் அடைந்த மாணவ– மாணவிகள் காலையில் சாப்பிடாமல் வந்துள்ளதால் தான் தடுப்பூசி போட்டதும் மயக்கம் அடைந்தனர். மற்றபடி அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நலமாக இருக்கின்றனர்’ என்றார்.

இதேபோல், கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டியில் ஆதிதிராவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போட்ட 4 மாணவ– மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சக்கையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருண் விக்ரமன் மாணவ–மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தார். மாணவ, மாணவிகள் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்