குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம்

குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாணவர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-03-02 23:00 GMT
நெல்லை,


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மலையில் பிறந்து, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை கடந்து வங்க கடலில் தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது. வற்றாத ஜீவநதியாக போற்றப்படும் தாமிரபரணி ஆற்றின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் அணை, சேர்வலாறு அணைகளிலும், அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு அணையிலும் தாமிரபரணி தண்ணீர் தேக்கப்படுகிறது. அதில் பாபநாசம் அணை 143 அடி உயரம் கொண்டது. தென் மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டதால்

 50 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் திறந்து விட வேண்டும், இதர பயன்பாடுகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று முடிவு செய்து உள்ளார்கள்.

தண்ணீர் எடுக்க தடை


இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அந்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதே போல் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று நெல்லையை சேர்ந்த வக்கீல் பிரபாகரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று மீண்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியது.

எதிர்ப்பு போராட்டம்


இதற்கு நெல்லையில் உள்ள சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் கோடை காலத்திலும் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியதற்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீஸ் உதவி கமி‌ஷனர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பால் ஊற்றி...


இதே போல் இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் உடையார், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் முன்பு தாமிரபரணி ஆற்றுக்கு பால் ஊற்றி போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டையில் பகுதியில் கூட தினமும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்sளில் 10 நாட்களுக்கு 1 முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தினமும் 96 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த நிறுவனம் உபரிநீரை மட்டும் எடுத்துக்கொள்வதாக கூறி அனுமதி கேட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் உபரி நீர் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. எனவே வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க, குறைந்தபட்சம் இந்த கோடைக்காலம் முடிவடையும் வரையிலாவது தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்