புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை அரசு பொது சேவை மையங்களில் இலவசமாக பெறலாம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்

அரசு பொது சேவை மையங்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

Update: 2017-03-03 22:45 GMT

தஞ்சாவூர்,

வாக்காளர் பட்டியல்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தஞசை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், படிவம் 6–ல் தங்கள் கைபேசி எண்ணை பூர்த்தி செய்திருந்தால், அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒரு தனிப்பட்ட அடையாள எண் குறுஞசெய்தியாக அனுப்பப்படும். வாக்காளர்கள் கைபேசியில் வரப்பெற்ற அந்த எண்ணை தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் அரசு பொது சேவை மையத்தில் காண்பித்து இலவச வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப்பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது புதிய வாக்காளர்கள் தங்களிடமுள்ள அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை அரசு பொது சேவை மையத்தில் காண்பித்து இலவசமாக புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம்

1–1–2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்த தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வசிப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், வருகிற 5–ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு முகாமில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6–ல் விண்ணப்பிக்க வேண்டும்.

பெயர் நீக்கலுக்கான படிவம் 7, பெயர் திருத்தம் மற்றும் வண்ண புகைப்படம் மாற்றம் செய்திட படிவம் 8, அதே சட்டமன்றத் தொகுதியில் முகவரி மாறுதல் செய்வதற்காக படிவம் 8ஏ ஆகிய படிவங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, அருகில் உள்ள வாக்குச் சாவடியில் அளிக்கலாம்.

8 சட்டமன்ற தொகுதிகள்

மேலும், தஞசாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத்தொகுதிகளில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் கருப்பு வெள்ளை புகைப்படம் மற்றும் பழைய தெளிவற்ற வண்ண புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, படிவம் 8யை பெற்றும், அதில் பழைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பூர்த்தி செய்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படத்தை இணைத்து தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தவர்களுக்குவண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்