சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டபணிகளுக்கான ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்

Update: 2017-03-10 22:30 GMT

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் சம்பத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சம்பத் பேசியதாவது:–

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர் ஆதாரப்பணிகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டம் நாமக்கல் மூலமாக 18 பணிகள் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலும், மேட்டூர் அணை கோட்டத்தின் மூலம் 30 பணிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 48 பணிகள் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டம் நாமக்கல்லில் 87 ஏரிகளும், மேட்டுர் அணை கோட்டத்தில் 15 ஏரிகளும் என மொத்தம் 102 ஏரிகள் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதியுடன் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 48 ஏரிகளை சீரமைத்தல், மதகு சீரமைத்தல், வரத்து வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் ஏரிக்கரை பலப்படுத்தல் ஆகிய பணிகள் பொதுப்பணி துறையின் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்