கூடுதலாக வரி வசூலித்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள்–ஊழியர்கள் 5 பேர் கைது

கூடுதலாக வரி வசூலித்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள்–ஊழியர்கள் 5 பேரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

Update: 2017-03-10 22:35 GMT

கொள்ளேகால்,

கூடுதலாக வரி வசூலித்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள்–ஊழியர்கள் 5 பேரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

கூடுதல் வரி வசூல்

சாம்ராஜ்நகர் டவுனில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கூடுதலாக வரி வசூல் செய்வதாகவும், அந்த பணத்தை அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் சம அளவு பிரித்து கொள்வதாகவும் ஊழல் தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஊழல் தடுப்பு படையினர் நேற்று முன்தினம் மதியம் வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு சட்டவிரோதமாக கூடுதலாக வரி வசூலித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

5 பேர் கைது

இதுதொடர்பாக அலுவலகத்தில் இருந்து வணிக வரித்துறை அதிகாரிகள் யோகேஷ், ரத்னராஜப்பா, ஊழியர்கள் சிவகுமார், மகாதேவா, அசோகா ஆகிய 5 பேரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர். கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக ரூ.41 ஆயிரத்தை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்து கொண்டனர். கைதான 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ஊழல் தடுப்பு படையினர் 5 பேரிடமும் விசாரிக்க 2 நாட்கள் நீதிபதியிடம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து நீதிபதி, அவர்கள் 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்