நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-03-11 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

நேர்முக தேர்வு

நெல்லை மாவட்டத்தில் 556 சத்துணவு உதவியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நேர்முக தேர்வுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் உத்தரவின் பேரில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம் பெற்று இருந்தனர். பஞ்சாயத்து யூனியன் அளவில் குழுக்கள் பிரிக்கப்பட்டு தேர்வு நடந்தது.

காலை 9 மணி முதல் பெண்கள் வரத்தொடங்கினர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர். சில பெண்கள் தங்களுடைய கணவரை அழைத்து வந்தனர். இந்த நேர்முக தேர்வில் சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகம் முழுவதும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி

ஒவ்வொரு யூனியன் வாரியாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரே‌ஷன்கார்டு, ஆதார் எண் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டன. மாலை வரை நேர்முக தேர்வு நடந்தது.

இதுகுறித்து சத்துணவு துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. அதன் விவரங்களை கலெக்டரிடம் சமர்ப்பிப்போம். அரசு வழிகாட்டுதலின் படி, பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அனுப்பி வைக்கப்படும்“ என்றார்.

மேலும் செய்திகள்