ரெயில்வே கோட்ட அதிகாரிகள் சோதனை: ரெயிலில் ஓசி பயணம் செய்தவர்களுக்கு ரூ.2.47 லட்சம் அபராதம்

சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா உத்தரவின்பேரில் சேலம் கோட்ட

Update: 2017-03-11 22:15 GMT

சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா உத்தரவின்பேரில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் மற்றும் சேலம் கோட்ட வணிக மேலாளர் மாது ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சேலம் ரெயில்வே கோட்டம் முழுவதும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணச்சீட்டு இல்லாமல் அதிகம் பேர் ரெயிலில் ஓசி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரெயிலில் ஓசி பயணம் செய்த 546 பேருக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 25 அபராதம் விதித்து உடனடியாக வசூலிக்கப்பட்டது. சேலம் ரெயில்வே கோட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பயணச்சீட்டு பரிசோதனையில் வசூலிக்கப்பட்ட தொகையில் இதுதான் மிகப்பெரிய தொகை என்றும், இதற்கு முன்பு கடந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டதே அதிக தொகையாக இருந்தது என்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

233 பயணச்சீட்டு பரிசோதகர்களும், 4 ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் கொண்ட குழுவினர் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற முக்கிய ரெயில் நிலையங்களிலும், தன்பாத், எர்ணாகுளம், கோரக்பூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பயணச்சீட்டு சோதனைகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்