குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 4 பெட்டிகளுடன் மலை ரெயில்,சுற்றுலா பயணிகள் அவதி

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 4 பெட்டிகளுடன் மலை ரெயில் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2017-03-11 22:45 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரெயில் என்பது பாரம்பரிய சின்னமாக இருப்பதோடு மாவட்டத்திற்கு சிறப்பை கூடுதலாக்குகிறது. இயற்கை காட்சிகள் சூழலில் மலைரெயில் வரும்போது ரெயிலில் பயணம் செய்யும் ரெயில் பயணிகள் இயற்கை காட்சிகளை முழுமையாக கண்டுகளிக்க முடிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு காலை 7.45 மணி, மதியம் 12.30 மணி, மாலை 4.30 மணி என 3 பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் மலைரெயில் குன்னூரை காலை 10.30 மணிக்கு அடைகிறது. பின்னர் இந்த ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறது. ஆக மொத்தம் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 4 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் அனைத்தும் டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் அவதி

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 5 பெட்டிகளுடன் மலைரெயில் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து இருந்தனர். இந்த நிலையில் அந்த ரெயிலில் இருந்து ஒரு பெட்டி மட்டும் திடீரென்று கழற்றப்பட்டது. பின்னர் அதில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு மலைரெயில் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி புறப்பட்டு சென்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் நாள்தோறும் ஏராளமான பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த சமயத்தில் 5 பெட்டிகளுடன் இயக்கப்படவேண்டிய மலைரெயில் இன்று (நேற்று) 4 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்தோம் என்றனர்.

மேலும் செய்திகள்