தி.மு.க. ஆட்சி காலத்தில் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2017-03-11 22:30 GMT
திருவெண்காடு,

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் தி.மு.க. பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துதேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், குத்தாலம் அன்பழகன், அருள்செல்வன், ஜெகவீரபாண்டியன், சித்திக், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சசிக்குமார் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு நலஉதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அது தொடர்பான கருத்தை தெரிவித்தார். அதனை இந்த அரசு ஏற்று கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு சவால் விடுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசி கொண்டிருக்கிறார். இது தவறான செயலாகும். தமிழகத்தில் 1 கோடியே 87 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுக்க டெண்டர்விட்டு வாங்க கூடிய அளவுக்கு பொருட்கள் தமிழகத்தில் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றுதான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். சட்டசபையில் நாங்கள் எதிரியாக செயல்படாமல், எதிர்கட்சியாக தான் செயல்படுகிறோம். நாட்டு மக்களுக்கு நல்லதாக இருந்தால் பாராட்டுவோம். இல்லையென்றால் எதிர்ப்போம். ‘நீட்‘ தேர்வை கொண்டுவர சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தபோது அதனை ஆதரித்தோம்.

ஆசிரியர் பணியிடங்கள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முதலில் மு.க.ஸ்டாலின் தான் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்துதான் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிரப்பப்பட்டன. ஆனால் தற்போது ஒவ்வொரு பணிக்கும் ஒரு விலை வாங்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பாதிகூட நிறைவேற்றப்படவில்லை. முதல்-அமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த பதவிபோன பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கலைவாணன், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் முத்துகுபேரன், கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், விஜயேஸ்வரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்