குமரி மாவட்ட பாசன குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்கியது

குமரி மாவட்ட பாசன குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்கியது.

Update: 2017-03-11 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பாசனக்குளங்களை அரசு தூர்வார வேண்டும் அல்லது விவசாயிகளை இலவசமாக தூர்வாரி வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட 1,051 குளங்களின் பெயர்களை மாவட்ட அரசிதழில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானால் வெளியிடப்பட்டது. அத்துடன் விவசாயிகளுக்கு அதற்கான உத்தரவையும் வழங்கினார்.

இதையடுத்து அந்தந்த பகுதி விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு விவசாயிக்கும் 10 யூனிட் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் மண் எடுத்து வருகிறார்கள்.

தொடங்கியது

இந்தநிலையில் கல்குளம் தாலுகா நுள்ளிவிளை ‘அ’ கிராமம் வில்லுக்குறி மணக்கரை அருகே உள்ள தாமரைக்குளத்தில் பகவதி பிள்ளை என்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட உத்தரவுப்படி குமரி மாவட்டத்திலேயே முதல் குளமான இந்த குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தொடங்கி வைத்தார். தக்கலை பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் கதிரவன் முன்னிலை வகித்தார். விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, சண்முகம்பிள்ளை, வருக்கத்தட்டு தங்கப்பன் மற்றும் ஏராளமான விவசாயிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வண்டல்மண் எடுப்பது தொடர்பாக பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியிருப்பதாவது:–

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒவ்வொரு குளமும் அமைந்துள்ள வருவாய் கிராமம் மற்றும் அதனைத் தொட்டு அமைந்துள்ள வருவாய் கிராமத்தில் நிலம் உள்ள ஒவ்வொரு விவசாயியும் 10 யூனிட் வண்டல் மண் பெற தகுதியுடையவர் ஆவர். விவசாய நிலத்துக்கான நிலவரி ரசீது, கம்ப்யூட்டர் பட்டா ஆகியவற்றின் நகலுடன் அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் தனித்தனியாக 17–3–2017–க்குள் மனு கொடுக்க வேண்டும்.

சேதம் ஏற்படுத்தாமல்...

மனு கொடுத்த 5 நாட்கள் கழித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் இருந்து உத்தரவு தனித்தனியாக வழங்கப்படும். குளத்தின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முன்னிலையில் 10 யூனிட் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.

குளத்தின் மடைகள், கரைகள், கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், ஒரே சீரான ஆழத்தில் குளங்களை தூர்வாரி வண்டல் மண் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்