தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் யோகா மையம் அமைக்கப்படும் அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் உறுதி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் யோகா மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.

Update: 2017-03-11 21:54 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உலக அளவிலான யோகா மாநாடு 2 நாட்கள் நடந்தது. தமிழ்ப்பல்கலைக்கழகம், ஹாங்காங் யுவா யோகா மந்திரம் அறக்கட்டளை, மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடம், பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயம், பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆசிரமம் ஆகியவை சார்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டின் 2–வது நாளான நேற்று காலை யோகா அமைப்புகளுக்கும், பயிற்றுனர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு, யோகா அமைப்புகளுக்கும், பயிற்றுனர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினர்.

அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன்

விழாவில் அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் பேசியதாவது:–

தமிழில் இருக்கிற படைப்புகளில் பக்திக்கும், யோகத்துக்கும் பாலமிட்டு பிணைப்பதே மூலர் அருளிய திருமந்திரம். யோக கலையின் முன்னோடியாக திருமூலரது வாக்கையும், பதஞ்சலி முனிவரின் கருத்தையும் உலக அளவிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற உன்னத முனைப்பு தமிழர்களிடம் வேண்டும். திருவாசகமும், திருமந்திரமும் பக்திநெறியில் முக்தி தேடுபவர்களுக்கு அருள் நிழல் வழங்குவதில் இருமருங்கிலும் நிற்கின்ற ஆலமரங்கள் போன்றவை. இதனை உணர்ந்து தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் செம்பொருட்டுணிவு உயராய்வு இருக்கையை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்படுத்தினார்.

யோகா கலையை பயிற்றுவிப்பதன் மூலம் மனதை செம்மைப்படுத்தும் பணியை மக்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்ப்பல்கலைக்கழகம் இந்த மாநாட்டை நடத்துகிறது. இங்கு பேசிய தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் யோகா மையத்தை தமிழக அரசு செய்து கொடுக்கும் என்று உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் துரைக்கண்ணு

விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பேசியதாவது:–

தமிழ்ப்பல்கலைக்கழகத்தை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இந்த பல்கலைக்கழகம் இன்று உலக தமிழ்ப்பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. உலக தமிழ்ப்பல்கலைக்கழகமாக விளங்குவதோடு, உலகத்தமிழ்மாநாடு கண்ட தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்தில் இன்று உலக யோகா மாநாடு நடைபெறுவது பெருமை அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை இருக்கும். அது நம்மை ஆட்படுத்தி மன நிம்மதி இல்லாமல் இருக்க செய்யும். அந்த காலக்கட்டத்தில் மன அமைதி பெற, உடல் ஆரோக்கியம் பெற யோகா பயிற்சி தேவை.

எனவே உலக அமைதி, மன அமைதி, உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பயிற்சி அவசியம். இந்த தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், வளர்ச்சிக்கு தேவையானவற்றையும் தமிழக அரசும், அமைச்சர்களும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் நிச்சயம் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

14 அமைப்புகளுக்கு பாராட்டு

விழாவில் சென்னை சித்தர்கள் ஆய்வு மையம், திருமூலம் யோகா இயற்கை உணவு அறக்கட்டளை, பிராணாயாமம், சித்தர் இலக்கிய வட்டம், பிராண சிகிச்சை மையம், நவயுகம் அறக்கட்டளை, தஞ்சாவூர் எம்.ஜி.ஆர். சிலம்பம் யோகா நடனப்பள்ளி, ரமண கர்ப வித்யா மையம், பேரளம் வேதாத்ரி மகரிஷி ஆசிரமம், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயம், ஹாங்காங் யுவா யோகா மந்திரம் அறக்கட்டளை, கடலூர் சர்வதேச தமிழ்த்தாவர உணர்வாளர் சங்கமம், ஓசூர் சிவமதியின் ஜீவயோக ஜோதிமையம், திருப்பூர் திருவள்ளுவர் யோகா மற்றும் இயற்கை விடியல் கல்வி அறக்கட்டளை ஆகிய 14 அமைப்புகள் பாராட்டப்பட்டன.

விழாவில் ரெங்கசாமி எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் மற்றும் யோகா ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்