உபி, உத்தரகாண்டில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிரதிபலிக்கும்

உபி, உத்தரகாண்டில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-11 22:51 GMT

பெங்களூரு,

உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் பா.ஜனதாவுக்கு கிடைத்த அமோக வெற்றி கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் கொண்டாட்டம்

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கோவா, மணிப்பூரில் இழுபறி நிலவுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றிருப்பதை பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.

மேலும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் நடனமாடி மகிழ்ந்தார்கள். கட்சியின் முக்கிய தலைவர்களும் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு, முன்னாள் துணை முதல்–மந்திரி அசோக் இனிப்பு வழங்கினார். அதன்பிறகு, எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் இல்லாத நாடு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் கருத்து கணிப்புகளையும் மீறி 300–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜனதா முன்னிலையில் இருக்கிறது. அந்த மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். பஞ்சாப்பில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன், சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்திருக்கக்கூடாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால், சமாஜ்வாடி கட்சி பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

1,000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறினார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளனர். நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அலை வீசுகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா பெற்றுள்ள வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாகும். காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதே பிரதமரின் கனவு ஆகும். அவரது கனவு பலித்து வருகிறது.

கர்நாடகத்திலும் பிரதிபலிக்கும்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜனதா பெற்றுள்ள வெற்றி அடுத்த ஆண்டு(2018) கர்நாடக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலிலும் பிரதிபலிக்கும். காங்கிரஸ் இல்லாத கர்நாடக மாநிலமாக மாற்றப்படும். 2018–ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. மத்திய பா.ஜனதா அரசின் சாதனைகள், முதல்–மந்திரி சித்தராமையா ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை மக்களிடத்தில் கொண்டு சென்றாலே போதும், கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்று விடும்.

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ரூ.96 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதே சித்தராமையாவின் சாதனை என்று சொல்லலாம். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கிடைத்த வெற்றியால் பா.ஜனதா கட்சியினருக்கு யானை பலம் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பேட்டியின் போது அசோக், ஷோபா எம்.பி. ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மேலும் செய்திகள்