மும்பையில் நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். நிதின் கபூர் பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர். திரைப்பட தயாரிப்பாளரான இவர், மும்பை அந்தேரியில் உள்ள தன்னுடைய சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். ஜெயசுதா குடும்பத்தினருட

Update: 2017-03-14 22:00 GMT

மும்பை,

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயசுதா

பிரபல நடிகை ஜெயசுதா, 1972-ம் ஆண்டு தனது 12-வது வயதில் ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். 1973-ம் ஆண்டு, அவரை ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் கே.பாலசந்தர் தமிழில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து, கே.பாலசந்தர் இயக்கத்தில், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களிலும், நடிகர் கமல்ஹாசனுடன், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், ராசலீலா, தங்கத்திலே வைரம், ஆயிரத்தில் ஒருத்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

ரஜினியுடன்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் ரஜினிகாந்துடன் ‘பாண்டியன்’ படத்தில் அவருடைய அக்காள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர், ராஜநடை, அந்தி மந்தாரை, தவசி, அலைபாயுதே, தோழா ஆகிய படங்களிலும் நடித்தார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஜெயசுதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆகவும் பதவி வகித்துள்ளார்.

ஜிதேந்திராவின் சகோதரர்

நடிகை ஜெயசுதாவுக்கும், தயாரிப்பாளர் நிதின் கபூருக்கும் கடந்த 1985-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நிகார், ஸ்ரேயான் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். நிதின் கபூர், இந்தி நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர் ஆவார்.

ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர், மும்பை அந்தேரியில் உள்ள தன்னுடைய சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். ஜெயசுதா குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் வசிக்கிறார்.

தற்கொலை

இந்நிலையில், ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர், நேற்று மதியம் 1.45 மணியளவில், மும்பையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.

போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஜெயசுதா உள்பட குடும்பத்தினர் மும்பை விரைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிதின் கபூர் இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்கள் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய மகனை வைத்து ஒரு படம் தயாரித்தார்.

இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வெற்றி பெறவில்லை. இதனால், 58 வயது நிதின் கபூர் கடும் விரக்தியில் இருந்தார். நிதின் கபூர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்