பூட்டியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

குளித்தலை அருகே பூட்டியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-01 23:00 GMT
குளித்தலை,

குளித்தலை சபாபதிநாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கமல்லிகா(வயது 57). இவர் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் காலை 9.15 மணி அளவில் அவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது.

இதில் அவரது வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த தகரங்கள் பெயர்ந்து சில மீட்டர் தூரத்திற்கு பறந்து விழுந்தன.

மேலும் அவரது வீட்டின் அருகே குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்புகள் உள்ளன.

சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிவதை பார்த்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீயை அணைக்க முயன்றனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு வந்த மின்சாரவாரிய அலுவலர்கள் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினர். மாணிக்கமல்லிகா வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து அந்த தீ சிலிண்டர் இருந்த இடத்திற்கு பரவியதால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த தீவிபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்