10 திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

நெல்லை மாவட்டத்தில் 10 திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கருணாகரன் வழங்கினார்.

Update: 2017-04-01 22:15 GMT
நெல்லை,


சமூக நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கறவை மாடுகள், தையல் எந்திரங்கள் போன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 திருநங்கைகளுக்கு கலெக்டர் கருணாகரன் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை மாவட்டத்தில், திருநங்கைகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களின் மூலமும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் மூலம் 3 திருநங்கைகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடுகளும், 4 திருநங்கைகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் எந்திரங்களும், ஒரு திருநங்கைக்கு அரிசி வியாபாரம் செய்திட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டைகளும், 2 திருநங்கைகளுக்கு கோழி பண்ணை வைக்க நாட்டுக் கோழிகளும் வழங்கப்பட்டன.

ரூ.3 லட்சம் மதிப்பில் வீடுகள்


மேலும், மானூர் யூனியன் நரசிங்கநல்லூர் பகுதியில் 29 திருநங்கைகளுக்கு கூடங்குளம் சுற்றுப்பகுதி மேம்பாட்டு திட்ட உபரி நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. திருநங்கைகள் பொருளாதார ரீதியில் சுயசார்பு நிலையினை அடைய பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக அலுவலர் முத்துலட்சுமி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்