போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-02 23:00 GMT

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் கட்டமாக நேற்று நடைபெற்றது. பரமக்குடி தாலுகா போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் நடராஜன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 70 ஆயிரத்து 448 பேர் வசித்து வருகின்றனர். இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 250. இந்த குழந்தைகளுக்கு 2017–ம் ஆண்டிற்கு தேசிய போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 2 கட்டங்களாக உள்ளது.

2–வது கட்டம்

இதன்படி நேற்று முதல் கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனையொட்டி ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதிகளில் 1,217 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 4,897 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். இதேபோல வருகிற 30–ந்தேதி 2–வது கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் முகமது சுல்த்தான், மருத்துவர்கள் ஆனந்தக்குமார், பாரதிப்ரியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்