விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இளைஞர்கள் தர்ணா போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இளைஞர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகளும், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர்.

Update: 2017-04-02 23:00 GMT
திருச்சி,

தமிழகத்திற்கு கூடுதலாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நேற்று 20-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

இந்தநிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும் என இளைஞர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். இதற்காக மாநகர போலீசாரிடம் அனுமதியும் பெற்றிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள்

அறிவித்தபடி போராட்டம் நடத்த நேற்று காலை தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் இளைஞர்கள் திரண்டனர். சாமியானா பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயம் சார்ந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர். விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் கோஷமிட்டனர்.

போராட்டம் தொடரும்

இந்த தர்ணா போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றவர்களும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மைதானத்தின் அருகே கிரிக்கெட் விளையாட வந்த சிறுவர்களும் போராட்ட களத்தில் அமர்ந்து கோஷம் போட்டனர். காலை 10.20 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5.30 மணி அளவில் முடிவடைந்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தவறினால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என இளைஞர்கள் தெரி வித்தனர். 

மேலும் செய்திகள்