2.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் 2.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-04-02 23:00 GMT
நெல்லை,

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நலப்பிரிவில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி தனி அதிகாரி சிவசுப்பிரமணியன், அரசு ஆஸ்பத்திரி டீன் சித்தி அத்திய முனவரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் ராம்கணேஷ் (நெல்லை), செந்தில்குமார் (சங்கரன்கோவில்), மாநகர நல அலுவலர் பொற்செல்வன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

2.88 லட்சம் குழந்தைகள்

இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு போலியோ எனும் இளம்பிள்ளை வாதம் தாக்கம் இல்லாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கும் முகாம் இந்த ஆண்டு 2 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட முகாம் தற்போது நடைபெற்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,708 போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் மூலம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 530–க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

2–வது கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 30–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.

செங்கோட்டை

செங்கோட்டை நகரில் 9 மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்