பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

திருவாரூரில் கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2017-04-04 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாரூர் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் அலுவலர்கள் பாலுச்சாமி, அன்பழகன், விஜயகுமார், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், முட்டை வாங்கும்போது விற்பனையாளர்களின் பேட்ச் எண், அனுப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும். மேலும் முட்டையில் ஏதும் சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்பு துறை அலுவலக எண்ணிற்கும், உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

நடவடிக்கை

இந்த எண்கள் விவரங்கள் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் முட்டை எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். இதனை மீறி விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்