புனேயில் பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது 15 மாணவர்கள் உயிர் தப்பினர்

புனேயில், பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது. அதில் சென்ற 15 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2017-04-10 21:59 GMT
புனே,

புனே, தாபோடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வேன் நேற்று 15 மாணவர்களை ஏற்றி கொண்டு கட்கி பகுதி நோக்கி சென்று கொண்டு இருந்தது. வேன் ஹரிஸ் மேம்பாலம் அருகே சென்ற போது, திடீரென என்ஜினில் இருந்து புகை வெளியேறியது. இதை கவனித்த டிரைவர் உடனடியாக வேனை சாலையோரம் நிறுத்தினார். மேலும் வேனில் இருந்த 15 மாணவர்களை அவசர அவசரமாக கீழே இறக்கினார்.

தீப்பிடித்து எரிந்தது

குழந்தைகளை இறங்கிய சில வினாடிகளில் வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைபார்த்து அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வேனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு 15 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரை அப் பகுதி மக்கள் பாராட்டினர். 

மேலும் செய்திகள்