தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல, அலங்கோல காட்சி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பேச்சு

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல, அலங்கோல காட்சி என்று தி.மு.க. துணை பொது செயலாளர் பேசினார்.

Update: 2017-05-05 22:30 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் போகலூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் பூமிநாதன், மஞ்சூர் தங்கராஜ், தினைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் ஒன்றிய பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் சம்பத், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கிருபானந்தம் ஆகியோர் பேசினர். விழாவில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைச்சாமி பேசியதாவது:– ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் கனவு சிதைந்து போகும், எனவே அதை தி.மு.க. எதிர்க்கிறது. இதை அ.தி.மு.க.வோ, ஓ.பன்னீர்செல்வமோ தட்டிக்கேட்க முடியவில்லை. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை அடித்து கொன்று விட்டு பின்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று 75 நாட்கள் பிணமாகத்தான் வைத்திருந்தனர். இதற்கு அந்த மருத்துவமனையும் உடந்தையாக இருந்துள்ளது. கவர்னர் உள்பட அனைவரும் ஜெயலலிதா நலமாக உள்ளார் என அவரை பார்க்காமலேயே கூறி உள்ளனர். முதல்–அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது, நீதி விசாரணை தேவை என ஓ.பன்னீர்செல்வம் நாடகமாடுகிறார். இதனை மக்கள் நம்பமாட்டார்கள்.

அலங்கோல காட்சி

தற்போது நடக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. இது தேவையா? தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல, அலங்கோல காட்சி. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு தயங்குகிறது. திட்டங்களை அறிவிப்பதோடு சரி எந்த நிதியும் ஒதுக்குவது இல்லை. இந்த கட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், அகமதுதம்பி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ராஜசேகர், பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்