நெக்னாமலைக்கு சாலை வசதி கேட்டு எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை

நெக்னாமலைக்கு சாலை வசதி கேட்டு எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-05 23:54 GMT

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே நெக்னாமலைக்கு சாலை வசதி கேட்டு எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை

ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நெக்னாமலையில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அந்த மலைப்பகுதிக்கு சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் நிலோபர் கபிலிடம் மனு அளிக்க வந்தனர். அவர், ஊரில் இல்லாததால் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

150 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், தாசில்தார் முரளிகுமார், ஒன்றிய ஆணையாளர்கள் ரமேஷ்குமார், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்