தளி அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு வனத்துறையினர் அதிர்ச்சி

தளி அருகே ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2017-05-06 22:15 GMT

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ளது தாசரிப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதி உள்ளன. நேற்று முன்தினம் இரவு அந்த காட்டில் இருந்து 4 யானைகள் உணவுக்காக தாசரிப்பள்ளி கிராமத்திற்குள் வந்தன. அதில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சூரிய நாராயணன் என்பவரின் விளைநிலத்தில் இறந்து கிடந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் யானை இறந்து கிடப்பதை பார்த்து, ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஜவளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் வனத்துறை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர். அப்போது யானையின் கால் பகுதியில் லேசான காயம் இருந்தது. அதே போல துதிக்கையில் காயமும், வாயில் நுரை தள்ளியும் இறந்து கிடந்தது.

வனத்துறையினர் அதிர்ச்சி

பிரேத பரிசோதனையின் முடிவில் யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் சென்ற தாழ்வான மின்சார வயரில் யானையின் துதிக்கை பட்டு அது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. பின்னர், அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு, யானையின் உடல் புதைக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை அருகே தொலுவபெட்டா கிராமத்தில் நேற்று முன்தினம் பலாப்பழத்தை துதிக்கையால் பறிக்க முயன்ற பெண் யானை ஒன்று, மின்சாரம் தாக்கி பலியானது. அதன் தொடர்ச்சியாக நேற்று மற்றொரு யானையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்