விவசாயிகளின் கடனை வசூலிக்க வங்கியாளர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட உதவி கலெக்டர் பரிந்துரை

விவசாயிகளின் கடனை வசூலிக்க வங்கியாளர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உதவி கலெக்டர், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Update: 2017-05-06 23:00 GMT
திருச்சி,

திருச்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த கோரி வங்கியாளர்கள் நோட்டீஸ் அனுப்புவதாகவும், ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறி, இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் விவசாயிகள், வங்கியாளர்கள் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் எனவும், அதில் விவசாயிகள் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும் கலெக்டர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன், த.மா.கா. விவசாயிகள் அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் அயிலை சிவசூரியன், சின்னதுரை உள்பட விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் கோரிக்கை

கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து விவசாய சங்க தலைவர்கள் கூறுகையில், வறட்சியின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடனை திருப்பி செலுத்தாத நிலையில் இருக்கிற போது கடனை திருப்பி செலுத்த கோரி வங்கியாளர்கள் நோட்டீஸ் அனுப்புவது, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை கைவிட வேண்டும்.

மேலும் விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை வங்கியாளர்கள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும். வறட்சி நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் போது அதனை கடன் கணக்கில் கழிக்க கூடாது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் போது கடன் தொகையில் கழிக்க கூடாது என்று தெரிவித்ததாக, கூறினர். இக்கோரிக்கைகளுக்கு வங்கியாளர்கள் உயர் அதிகாரிகளிடம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

உதவி கலெக்டர் பரிந்துரை

விவசாயிகளின் கடனை வசூலிக்க வங்கியாளர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உதவி கலெக்டர் கணேஷ்குமார், கலெக்டர் பழனிசாமிக்கு பரிந்துரை செய்தார். மேலும் விவசாயிகளின் வங்கி கடன் தொகைக்காக வறட்சி நிவாரணம், 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளம், முதியோர் ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்யக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் வங்கியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார்.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த விவசாய சங்க தலைவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், “உதவி கலெக்டரின் பரிந்துரையை கலெக்டர் ஒரு வாரத்திற்குள் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடன் தொகை ரூ.ஆயிரத்து 980 கோடியே 33 லட்சத்தை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். 

மேலும் செய்திகள்