குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதால் மணல் விலை குறையும் சங்க தலைவர் பேட்டி

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

Update: 2017-05-06 22:30 GMT

சேலம்,

மாவட்ட பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் சந்திரன், துணை செயலாளர் பழனிசாமி உள்பட மணல் லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்திருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட தலைவர் செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சரை சந்தித்து மனு

தமிழகம் முழுவதும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 30–ந் தேதி மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதன் பிறகு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தோம். அதில், மணல் குவாரிகளை விரைவாக திறக்க வேண்டும். 6 சக்கர லாரிகளுக்கு 2 யூனிட், 10 சக்கர லாரிகளுக்கு 3 யூனிட் மணல் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்திருந்தோம்.

மணல் விலை குறையும்

இந்நிலையில், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே, உடனடியாக குவாரிகளை திறந்து, ஓரிரு நாட்களில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கடந்த 2003–ம் ஆண்டு மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. அப்போது, குவாரிகளில் 2 யூனிட் மணல் ரூ.632, 3 யூனிட் மணல் ரூ.960 என்ற விலையில் மணலை பெற்றோம். தற்போது மீண்டும் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதன் மூலம், மணல் விலை குறையும். இதற்கு நடவடிக்கை எடுத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்