அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவு

ஏற்காட்டில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2017-05-06 23:00 GMT

ஏற்காடு,

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று மாலை ஏற்காட்டிற்கு வந்தார். அங்கு அவர் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர், தாசில்தார் மணிவண்ணன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஏற்காடு வனப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மலைவாழ் மக்கள், அமைச்சரிடம் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஏற்காட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் வனப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவிட்டார். மேலும், ஏற்காட்டில் மரங்களை வெட்டும் தொழிலாளர்கள், தொடர்ந்து மரங்களை வெட்டுதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வனவிலங்குகளை பார்வையிட்டார்

அதைத்தொடர்ந்து காக்கம்பட்டி பகுதியில் மண்வள பாதுகாப்பு திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 10 லட்சம் மரக்கன்றுகள் எப்படி வளர்க்கப்படுகிறது? என்பது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், மான்பூங்காவிற்கு சென்ற அவர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வனவிலங்குகளை பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த சுற்றுலா பயணிகள், மான் பூங்காவில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று புகார் தெரிவித்தனர். அதற்கு பூங்காவில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து படகு இல்லத்திற்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிகாரிகளுடன் சிறிது நேரம் படகு சவாரி செய்தார். அப்போது, ஏரியில் தேங்கி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அப்புறப்படுத்தி ஏரியை தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க அறிவுறுத்தினார்.

புதிய பறவைகள்

மேலும், சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் புதிய பெலிக்கான் பறவைகளை வன உயிரியல் பூங்காவிற்கு ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்