ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து அரசு டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து திருச்சியில் அரசு டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.

Update: 2017-05-06 23:00 GMT
திருச்சி,

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர் களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இதை போன்று திருச்சி அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு சென்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்களும் நேற்று வழக்கம் போல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றனர்.

மெழுகுவர்த்தி ஏந்தினர்

ஆனால் கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு அருந்தாமல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என்று நேற்று மாலை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு வருத்தம் தெரிவித்து திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சங்கத்தை சேர்ந்த டாக்டர்களும், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளும் மெழுகுவர்த்தி ஏந்தி சிறிது நேரம் நின்று விட்டு கலைந்து சென்றனர்.

இதே போல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர் அருளஸ் வரன் முசிறி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்து கொண்டே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

மேலும் செய்திகள்