நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை தி.மு.க. அமைப்பு செயலாளர் பாரதி எம்.பி. பேச்சு

Update: 2017-05-06 22:30 GMT

திருமங்கலம்,

திருமங்கலத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கருத்தரங்க கூட்டத்தில், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசினார்.

கருத்தரங்கம்

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தியும் கருத்தரங்க கூட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கல்யாண மகாலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.

கருத்தரங்கில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேசியதாவது:–

ராஜாஜி காலத்தில் இருந்த கல்வி முறை, திராவிடர் கழகத்தின் பேராட்டத்தால் தான் மாறியது. காமராஜர் அனைவருக்கும் கல்வி, மாணவர்களுக்கு உணவு வழங்கினார். 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து கருணாநிதி உத்தரவிட்டார்.

பலன் இல்லை

மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்காது. மேலும் அதற்கான எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் படிப்பார்கள், ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் டாக்டராக இருக்க மாட்டார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதன்படி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும், மதவெறி பிடித்த மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும். மாணவ, மாணவிகள் பேராடினால் தான் வெற்றி கிடைக்கும். தமிழர்களாகிய நமது உரிமைகளை பறிக்க நினைக்கிறார்கள். அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். மாணவர்கள் உங்கள் எதிர்காலத்தை உணர்ந்து நாங்கள் அறிவிக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அவரை தொடர்ந்து முன்னாள் எம்.பி.யும், தேர்தல் பணி குழு செயலாளருமான செல்வேந்திரன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– அண்ணா, கருணாநிதி ஆகியோர் கரத்தில் இருந்த இந்தி எதிர்ப்பு வாள், இப்போது தளபதி ஸ்டாலின் கைக்கு வந்துள்ளது. ஒருவருக்கு உண்மையான அடையாளம் மதம் அல்ல, தாய் மொழி தான். அந்த தாய்மொழியான தமிழின் அடையாளமாக வாழ்ந்தவர் தான் சுப்பிரமணியபாரதி. இந்தியை எதிர்க்க மாணவர்கள் பேராட்டத்திற்கு வரும் போது தான் எழுச்சி ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ.சாமிநாதன், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திரசேகர் மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய, நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மாணவரணி அமைப்பாளர் பாண்டிமுருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்