கந்திலி ஒன்றியத்தில் 184 பயனாளிகளுக்கு மானிய விலையில் விசை தெளிப்பான்

கந்திலி ஒன்றியத்தை சேர்ந்த 184 பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மானிய விலையில் விசைதெளிப்பான்களை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன் ஆகியோர் வழங்கினர்.

Update: 2017-05-06 23:59 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியத்தை சேர்ந்த 184 பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மானிய விலையில் விசைதெளிப்பான்களை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன் ஆகியோர் வழங்கினர்.

விசைத்தெளிப்பான் வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின்படி கந்திலி ஒன்றியம் மூலம் வாழ்வாதார மேம்பாட்டு பணியின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை தெளிப்பான் வழங்கும் விழா திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் வாசுதேவரெட்டி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு முகமை திட்ட அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு, 184 பயனாளிகளுக்கு விசை தெளிப்பான்களை வழங்கினர்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது :–

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமாக கந்திலி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர் பயன்பெறும் வகையில் தமிழக அரசு 184 பேருக்கு தலா ரூ.6 ஆயிரத்து 200 வீதம் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் செலவில் விசை தெளிப்பான்களை வழங்கியுள்ளது.

எண்ணற்ற திட்டங்கள்

இந்த விசை தெளிப்பான்களை மகளிர் சுய உதவி குழுவினர் வாடகைக்கு விட்டும், விவசாய நிலத்தில் வேலை செய்தும் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். அவர்களது நிலை சமுதாயத்தில் உயர வேண்டும். இன்னும் எண்ணற்ற திட்டங்களை ஜெயலலிதா அரசு நிறைவேற்ற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., திருப்பத்தூர் சப்–கலெக்டர் கார்த்திகேயன், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் சி.செல்வம் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் கந்திலி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் தமிழ்வாணன், பொறியாளர் விஸ்வநாதன், கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நீர்வடிப்பகுதி உறுப்பினர் விஜயபாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்