தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று இரவு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2017-06-01 02:00 IST
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று இரவு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் தாமிரபரணி ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில், குடிநீர் கேட்டு தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7-வது தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதேபோல் தூத்துக்குடி வி.இ.ரோட்டிலும் மக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்