கூடலூர் நகர சாலையில் ஓடிய காட்டெருமையால் பரபரப்பு

கூடலூர் நகருக்குள் காட்டெருமை ஒன்று புகுந்து சாலையில் திடீரென ஓடியது. இதனால் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பீதி அடைந்தனர்.

Update: 2017-05-31 21:30 GMT

கூடலூர்

கூடலூர் பகுதியில் வனங்களின் பரப்பளவு குறைதல், வனவிலங்குகள் செல்லும் வழித்தடங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் காட்டு யானைகள், சிறுத்தை புலிகள் என வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் கூடலூர் பகுதியில் அதிகரித்து வருகிறது.

கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒரு காட்டு யானை கடந்த சில தினங்களாக முகாமிட்டு வருகிறது. மேலும் வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே தனியாக செல்வதற்கு தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் நகரில் நேற்று காலை 6 மணி அளவில் பொதுமக்களில் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

சாலையில் ஓடி வந்த காட்டெருமை

சிலர் ஆவின் பால் பண்ணையில் பால் வாங்கி கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கோத்தர்வயல், பெல்விடியார் பகுதியில் இருந்து ஒரு காட்டெருமை வேகமாக ஓடி வந்தது. பின்னர் அந்த காட்டெருமை ஊட்டி மெயின் ரோட்டுக்கு வந்து நின்றது. இதை கண்ட பொதுமக்கள் பயத்தில் அங்கிருந்து ஓடினர். இந்த நிலையில் அந்த காட்டெருமை, அங்கிருந்து ஓடத்தொடங்கியது. ஊட்டி செல்லும் சாலையில் ராஜகோபாலபுரம், தங்கமணி பகுதிகளில் தலை தெறிக்க ஓடி வந்தது.அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் ஊருக்குள் காட்டெருமை புகுந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காட்டெருமை தாக்கி விடும் என்ற பீதியில் அங்கிருந்து ஓடினர்.

இதனை தொடர்ந்து அந்த காட்டெருமை ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காபி தோட்டத்துக்குள் சென்றது. அதன்பின்னரே பொதுமக்கள், வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர்.

காபி தோட்டத்தில் முகாம்

இருப்பினும் காபி தோட்டத்துக்குள் காட்டெருமை முகாமிட்டுள்ளதால் அதனை சுற்றி உள்ள வ.உ.சி. நகர், அரசு மேல்நிலைப்பள்ளி, காசிம்வயல் பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே காட்டெருமை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினரும் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:– நடுவட்டம், ஊசி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து திசை மாறி காட்டெருமை கூடலூர் நகருக்குள் வந்துள்ளது. காலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் காட்டெருமையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வில்லை. பகல் வேளையாக இருந்தால் மக்களை தாக்கி இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர்கள் பீதியுடன் கூறினர்.

மேலும் செய்திகள்