12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் தந்தை தற்கொலை

12–ம் வகுப்பு தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-05-31 22:18 GMT

மும்பை,

12–ம் வகுப்பு தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

கனவில் மிதந்த தந்தை

புனே பிம்ப்ரி பகுதியை சேர்ந்தவர் விஷ்வம்பர் மாதவன் பிள்ளை (வயது48). இவரது மகன் 12–ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன்தினம் மகனின் தேர்வு முடிவை அறிவதற்காக அவர் மிகுந்த ஆர்வத்தில் இருந்தார். மகன் 10–ம் வகுப்பு தேர்வில் நன்கு படித்து 91 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், இந்த தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று சிறப்பு தேர்ச்சி (டிஸ்டிங்சன்) பெறுவான் என அவர் கனவில் மிதந்தார்.

மேலும் மகன் படித்த ஜூனியர் கல்லூரியில் அவன் தான் முதல் மதிப்பெண் பெறுவான் என்றும் அவர் கருதினார்.

தற்கொலை

ஆனால் மகனின் தேர்வு முடிவு அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாய் அமைந்தது. அவரது மகன் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இது விஷ்வம்பர் மாதவன் பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கியது.

இதனால் விரக்தி அடைந்த அவர் குளியல் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்