குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2017-06-12 22:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில், ஆத்தூர் தாலுகா செட்டியபட்டி ஊராட்சி வலையப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து, குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு குடும்பத்துக்கு 4 குடம் தான் கிடைக்கிறது. இதனால் குடிநீருக்காக பெரும் சிரமம் அடைந்துள்ளோம். எனவே, எங்களுக்கு சீரான அளவில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்றனர்.

மதுக்கடையை மாற்ற வேண்டும்

அதேபோல் விருவீடு மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், விருவீட்டில் 6 ஆயிரம் பேர் வசிக்கிறோம். அங்குள்ள 4 ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, காலாங்கரை ஓடையில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

சிலுவத்தூர் சாலையில் உள்ள உத்தனம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த பெண்கள், மதுக்கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர். முன்னதாக அவர்கள் கூறுகையில், உத்தனம்பட்டி பிரிவில் பஸ்நிறுத்தம் அருகே மதுக்கடை இருக்கிறது. மது குடிக்க வருபவர்கள் போதையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. எனவே, மதுக்கடையை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும், என்றனர்.

தேசிய கொடியுடன் மனு

மேலும் திண்டுக்கல் என்.எஸ்.கே.நகர், பாறைக்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் துரைராஜ் உள்ளிட்ட சிலர் தேசிய கொடியுடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அதேபோல் போலீசார் பலரும் பணியின் போது மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு இறந்த ராணுவவீரர், போலீசாரின் குடும்பத்தினரை தத்து எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டை ஊராட்சி மக்கள் கொடுத்த மனுவில், நீலமலைக்கோட்டை அருகே நாயக்கன் கோம்பை நீர்தேக்கம் உள்ளது. அதற்கு தண்ணீர் வரும் 4 கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சிலர் கிணறு அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்தேக்கத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வறட்சி நிவாரணம்

பழனி தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் வறட்சி நிவாரணம் கேட்டு கொடுத்தனர். அதுபற்றி விவசாயிகள் கூறுகையில், மேட்டுப்பட்டியில் 400 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை, மக்காசோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் வறட்சியால் கருகின. ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

கன்னிவாடியை அடுத்த டி.புதுப்பட்டி முத்துகிருஷ்ணன் கொடுத்த மனுவில், கன்னிவாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். மேலும் அலுவலகத்திற்குள் அலுவலர் புகைபிடிக்கிறார், என்று கூறப்பட்டுள்ளது. எம்.வி.எம்.நகர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ராஜ்நகர், நாகப்பாநகர், ராமசாமிகாலனி, எம்.வி.எம்.நகர் விஸ்தரிப்பு பகுதிகளில் குடிநீர், சாலை வசதி செய்துதர வேண்டும். குப்பைகளை தினமும் சேகரிக்க என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்